தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் அப்பாவு போட்டியிடுவதாக திமுக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்க இருக்கின்றனர். 12-ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
இதற்கிடையே, கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினர் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரை நியமித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில், ராதாபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அப்பாவு போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி யிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி போட்டியிடுவார் என்றும் திமுக அறிவித்துள்ளது.

இதற்கான தேர்தல், நாளை மறுநாள் (12.05.2021) நடைபெறுகிறது. இருவரும் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்பு மனுக்களை நாளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
1989 ஆம் ஆண்டிலிருந்து எம்.எல்.ஏவாக உள்ள அப்பாவு, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீண்ட அனுபவம் கொண்டவர். தென் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில், திமுக சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவரான அப்பாவு 1996லிருந்து 3 முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏவாக இருந்தவர்.
துணை சபாநாயகராக போட்டியிடும் கு.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் 6வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.







