ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி,  முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர்.  இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19…

மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி,  முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். 

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதுவரை மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.  9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியம் பிரதேசம் என மொத்தம் 96 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மேலும், ஆந்திர சட்டப்பேரவைக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்காக  1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும்.  இதனையடுத்து காலையிலிருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி,  கடப்பா மாவட்டம் புலிவெண்டுலா தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை செலுத்தினார்.  ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும்,  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குண்டூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.