சென்னையில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், முன்பைவிட வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மழை பெய்தால் நன்றாக இருக்கும் என மக்கள் மழையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை,தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி சென்னைவாசிகளின் மனதை குளிரவைக்க கோயம்பேடு, கிண்டி, அண்ணாநகர், மதுரவாயல், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கடும் வெப்பத்திற்கு இடையே இந்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.







