தாம் அரசியலில் இருப்பதையும் இல்லாமல் போவதையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மக்கள் மத்தியில் தமக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் சுற்றுப்பயணம் மன மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக குறிப்பிட்ட சசிகலா, தமிழ்நாடு மக்களும் அதிமுக தொண்டர்களும் விரும்புபவர்களை அரசியலில் இருந்து விரட்ட முடியாது என்று தெரிவித்தார். மக்கள் தம் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றம் வரும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை ஏற்பதாக தெரிவித்த சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







