முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் தமிழகம் லைப் ஸ்டைல் செய்திகள் சட்டம் Instagram News

பெயரில் தான் எல்லாம் இருக்கிறது


சுகிதா சாரங்கராஜ்

கட்டுரையாளர்

“பெண்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் தந்தை அல்லது கணவர் பெயரை துணைப்பெயராக சேர்த்துக் கொள்வது அடிமைத்தனம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் கணவர்களுக்கு அஞ்சி சேர்த்துக் கொள்கிறார்கள், தந்தை வழி சமூகத்தின் ஒரு அங்கம்” என்று பல்வேறு விதமாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் விவாதமானது.  உண்மையில் பெண்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் தந்தை அல்லது கணவரின் பெயரை சேர்த்துக் கொள்வது எதனால் என்று ஆய்வு செய்தால்,  இந்தியாவில், குறிப்பாக பண்டைய தமிழ்ச் சமூகத்தில், இத்தகைய நடைமுறை ஆரம்ப காலத்தில் இல்லை.

பிற்காலத்தில், இந்தியாவில் சாதி பெயர், குடும்ப பெயர்களை தங்களது பெயர்களுக்கு பின்னால் ஆண், பெண் இருதரப்பினருமே சேர்த்துக் கொள்ளும் பழக்கம் மற்ற மாநிலங்களில் உருவெடுத்தது.  தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் வெகு சிலரே சாதி பெயர்கள், குடும்ப பெயர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். என்றாலும் பெரும்பாலான தமிழ்நாட்டு குடும்ப விழாக்களில், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் உள்ளிட்டவற்றில் பத்திரிகைகளில் சாதி பெயர் சேர்த்துக் குறிப்பிடும் பழக்கம் தொடர்கதையாகவே உள்ளது. மற்றபடி பெயருக்கு பின்னாலும், கல்விச் சான்றிதழ்களிலும் 99 விழுக்காடு அளவுக்கு  சாதியைச் சேர்த்துக் கொள்வதில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாதி மறுப்பு குறித்து, ஒரு முறை நாடாளுமன்றத்தில் பேசிய திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாட்டின் இந்த சிறப்பை எடுத்துக்காட்டி  பேசினார்.  ”இங்கே அமர்ந்திருக்கும் எம்பிக்கள் அனைவரும் உங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை , குடும்ப பெயரை சேர்த்துள்ளீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வந்த எம்பிக்கள் யாரும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை” என சுட்டிக்காட்டினார் டிகேஎஸ் இளங்கோவன்.

அதே போன்று பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆண் பெண் பாலின பேதமின்றி தமிழ்நாடு நீங்கலாக மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்களை, குடும்ப பெயர்களை சேர்த்துக் கொள்கிறார்கள் .
தமிழ்நாட்டில் பெண்கள் சிலர் தங்கள் பெயருக்கு பின்னால் தந்தை அல்லது கணவர் பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள். தந்தை பெயரை சேர்த்தவர்கள் திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். சிலர் தங்களது பெயருக்கு முன்னால் உள்ள இனிஷியல் கணவர் பெயரின் முதலெழுத்தை போட்டுக் கொள்வதுண்டு. இதன் காரணமாக சிலருக்கு அரசு சான்றிதழ்களில் சில குழப்பங்கள் கூட நேரிடுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒன்று,  திருமணத்திற்கு பிறகு மற்றொன்று என்று பெயர் அல்லது இனிஷியல் மாற்றும் போது இந்த குழப்பங்கள் ஏற்படுகிறது . சில பெண்கள் திருமணத்திற்கு பின்பும் தங்களது தந்தை பெயர் அல்லது அவரது முதல் எழுத்தை தொடர்கிறார்கள்.

உலக அளவில் பெண்கள் எப்படி தங்களை அடையாளப்படுத்துகிறார்கள் என்றால், அமெரிக்காவில் 70 % பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவர் அல்லது கணவர் குடும்ப பெயரை தங்களது பெயருக்கு பின்னால் துணைப் பெயராக சேர்த்துக் கொள்கிறார்கள். இங்கிலாந்தில் 90% பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவர் அல்லது கணவரின் குடும்ப பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள் . மேலே குறிப்பிட்டுள்ள இந்த புள்ளி விவரங்கள் 2016 ஆய்வில் கண்டுணரப்பட்டவை. இந்த ஆய்வு 18 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட பெண்களிடம் எடுக்கப்பட்டவை.  ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்களிடம்   பாலின சமத்துவம், பெண்ணியம், பெண்ணுரிமை தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டன. அதில்  பெண்களின் உரிமைக்கே முன்னுரிமை அளித்து அவர்கள் பதிலளித்துள்ளார்கள். இதை வைத்து பார்க்கும் போது தலைமுறைகளை கடந்து குடும்ப பண்பாடாக திருமணத்திற்கு பின் கணவரின் பெயர் அல்லது குடும்ப பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள். என்றாலும் தங்களின் பெண்ணுரிமையை அந்த பெண்கள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதை அது காட்டுவதாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய  வழக்கம் எல்லாம் இல்லை. இடைக்காலங்களில் சமூக கட்டமைப்புகள் ஏற்படும் போது தான் சட்டங்கள் வகுக்கிறார்கள். அதனை பொது சட்டம் என்று அழைக்கிறார்கள். அந்த பொது சட்டத்தில் மக்கள் குடிமை சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அப்போது கணவரின் பெயரை திருமணத்திற்கு பிறகு சேர்க்கும் பழக்கத்தை சட்ட ரீதியாக கொண்டு வருகிறார்கள். இதன் நீட்சி தான் அமெரிக்காவில் 1970க்கு பிறகு பெண்கள் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்குரிமை என அனைத்திற்கும் திருமணமான பெண்களுக்கு கணவரின் பெயர் மற்றும் குடும்ப பெயர் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.  கணவரின் கட்டாய பாலியல் வல்லுறவைக் கூட அங்கீகரிக்கின்றன வளர்ந்த அமெரிக்கா போன்ற சில நாடுகள். திருமணத்திறகு பிறகு எல்லாம் கணவர் தானா, எங்களுக்கு எங்கள் உடல் கூட சொந்தமில்லையா என்ற குரல்கள் அங்கும் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருக்கின்றன. குடும்ப பெயர்களை மாற்ற, பாலின பேதங்களை நீக்க,  சம உரிமை சட்டம் கொண்டு வர  சிலர் போராடவும் செய்கிறார்கள்.

பிரபல பாப் பாடகி ஜெனிபர் லோபஸ், பிரபல இதழான Vogue க்கு அளித்த பேட்டி ஒன்றில் “”என்னை மக்கள் எல்லோரும் ஜெனிபர் லோபஸ் என அழைக்கிறார்கள். ஆனால் எனது திருமணத்திற்கு பிறகு Mrs. Affleck என எனது கணவரின் பெயரை தான் சான்றிதழ்களில், அரசு அடையாள அட்டைகளில் சட்டரீதியான எனது பெயராக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் நானாக இருக்கிறேன் , எனது கணவரின் பெயரை சான்றிதழ்களில், அரசு அடையாள அட்டைகளில் பயன்படுத்துவதை காதலுடனான புரிதலுடன் தான் பார்க்கிறேன். அதனால் என்னுடைய பெயருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரை சேர்க்காமல் பிறந்த போது வைத்த பெயரை அப்படியே வைத்துக் கொள்வதை சட்டமாக வைத்துள்ளார்கள். இது சான்றிதழ்கள் மற்றும் அரசு அடையாள அட்டைகளில் திருமணத்திற்கு முன்பு, பின்பு என மாற்றி மாற்றி பதிவிடுவதால் வரும் சிக்கல்களை களைய உதவுகிறது என்பதால் இந்த பழக்கம் தொடர்கிறது. அதே போன்று கிரீஸ் நாட்டில் 1983 ம் ஆண்டு முதல் பிறப்பின் போது வைக்கப்பட்ட பெயரையே திருமணத்திற்கு பிறகும் தொடர சட்டம் உள்ளது.

இதற்கு நேர் எதிரான பழக்கத்தையே கடைபிடிக்கிறது பாலின சமத்துவத்தில் முற்போக்காகவும்  தந்தை வழி விழுமியங்களை குறைவாகவும் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் நார்வே. அங்கே 95% பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது கணவரின் பெயர் மற்றும் கணவர் குடும்ப பெயர்களை தங்களது பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்கிறார்கள். தந்தை பெயர் ஒன்றாகவும், தாயின் பெயர் ஒன்றாகவும் இருக்கும் போது குழந்தைகளுக்கு குடும்ப பந்தம் இல்லாமல் வெவ்வேறானவர்களாக தந்தையும், தாயும் தெரிவார்கள். அதனால் குடும்ப குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பெரும்பாலான நாடுகளில் பெண்கள் திருமணத்திற்கு பிறகு பெயர் மாற்றம் செய்யும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

இதிலும் கூட ஏன் தந்தை பெயர் தான் குழந்தைகளின் பெயரோடு சேர்க்க வேண்டும் தாயின் பெயர் சேர்த்தால் என்ன என்பதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கு முன்னுதாரணமாக உள்ளது. 2021 ம் ஆண்டு, விவாகரத்துக்கு பிறகு தாயுடன் குழந்தை வளர்ந்தாலும் குழந்தைக்கு தனது பெயரையே துணைப் பெயராக (sur name) சேர்க்க வேண்டும் என்று தந்தை ஒருவர் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளீகல், தந்தை பெயர் தான் குழந்தைகளின் துணைப்பெயராக சேர்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் தாயின் பெயரை கூட சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் விவகாரத்து பெற்றவர்களின் குழந்தைகளுக்கு தந்தை பெயரை தலைப்பெழுத்தாக (Initial) வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கீதா இளங்கோவன் – இளங்கோவன் கீதா போன்ற ஒரு சில தம்பதிகள் , தங்களது துணையரின் பெயரை பரஸ்பர புரிதலின் பேரில் பெயர்களுக்கு பின்னால் சேர்த்துக் கொள்கிறார்கள் என்ற போதிலும், இவ்வாறு ஆண்கள் தங்களது மனைவியின் பெயரை, துணைப் பெயராக சேர்த்துக் கொள்வது வெறும் 3% என்கிறது 2018ல் எடுக்கப்பட்ட புள்ளி விபரம் .

அதே நேரத்தில் இந்தியாவில், தமிழ்நாட்டில் மேற்கூறப்பட்ட நாடுகளில் திருமணத்திற்கு பிறகான துணைப்பெயர்களை அடையாளப்படுத்த உள்ள சட்டம் போல் எந்த கட்டாய வழக்கமோ, சட்டமோ இல்லை. பெண்கள் தானாக முன்வந்து தந்தை பெயரை அல்லது கணவர் பெயரை தங்களது பெயருக்கு பின்னால் துணைப் பெயராக சேர்த்துக் கொள்கிறார்கள் .  தமிழ் நாட்டில் பெரும்பாலும் தந்தை பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வதில் பெண்கள் தயங்குவதில்லை. அதே நேரத்தில் கணவன் பெயரை சேர்த்துக் கொள்ள தயங்குகிறார்கள். தந்தையர்கள் பெண் குழந்தைகள் மீது அதிக பாசம் வைப்பதும், அம்மாக்கள் ஆண் குழந்தைகள் மீது அதிக பாசம் வைப்பதும் இயல்பான ஒன்று. அப்படி இருக்க பெண்கள் தாங்கள் ஏதேனும் சாதனைகள் புரியும் போது தந்தை அல்லது கணவன் பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்ப்பதை பார்க்க முடிகிறது.

ஆண் பிள்ளைகள் தான் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்; பெண் பிள்ளைகள் எப்படியாயினும் அடுத்த வீட்டிற்கு போக கூடியவர்கள் என்று ஜெயஜெய ஜெய ஹோ படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் நம் சமூகத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு தான் . வாரிசு உரிமை முழுவதையும் ஆண் பிள்ளைகளுக்கு வழங்கும் நிலை தான் இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது.  அப்படி இருக்கும் போது பெண்கள் சாதனைகள் புரியும் போது தந்தை அல்லது கணவர் பெயரை தன் பெயரோடு சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பது என்பதில் ஒருவித கர்வம் கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களிடம் இருந்த பறித்த ஒன்றை திருப்பி அளிப்பது போல், குறைத்து தன்னை மதிப்பிடுவதை உடைத்தெறிவே பெயருக்கு பின்னால் சேர்க்கப்படும் அப்பாவின் பெயர் அல்லது கணவனின் பெயரை ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள்.

தேசிய அளவில், தமிழ்நாடு தவிர்த்து புகழ்பெற்ற பல பத்திரிகையாளர்கள் ஆண்கள் – பெண்கள் இரு தரப்பினரும் தங்களோட பெயருக்கு பின்னால் சாதி பெயர், குடும்ப பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள். அது தந்தைக்கோ , கணவனுக்கோ தங்கள் மூலம் கிடைக்கும் பெயர் புகழின் அங்கமாக இருக்கலாம் என கருதுவதே முக்கிய காரணம். பெண்கள் விரும்பி தங்களது பெயருக்கு முன்னால் தந்தை அல்லது கணவன் பெயரை சேர்க்கும் போது அது தவறில்லை. ஆனால் பெண்களுக்கென்று தனி அடையாளம் இருக்க கூடாது என கணவர் அல்லது கணவர் வீட்டின் கட்டாயத்தின் பேரில் சில பெண்கள் பெயர் மாற்றம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தங்களது பெயரில் கூட அடையாளம் மறுக்கப்படுவதை குறித்த வருத்தங்கள் உள்ளன . ஆனால் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அத்தகைய பெண்கள் இருக்கிறார்கள் . இன்னும் சில பெண்கள் கணவன் மீதான காதலில் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள் . அதிலும் பெரிய அளவில் சிக்கல் இல்லை. கட்டாயத்தின் பேரில் எவை ஒன்றையும் பெண்கள் மீது திணித்தால் அது தவறு. அதனை தான் பெண்ணுரிமை போராளிகள் எதிர்க்கிறார்கள் .

தந்தை பெயரைச் சேர்த்துக் கொள்ள தயங்காத பெண்கள், கணவர் பெயரை சேர்த்துக் கொள்ள தயங்குவதற்கு சொல்லும் காரணம் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் விவாகரத்து பெற நேர்ந்தால் அந்த பெயரை மீண்டும் மாற்ற வேண்டும் என்பதனை சிந்தித்து தந்தை பெயருடனேயே வலம் வருகிறார்கள். இது வாழ்க்கை மீதான தெளிவு பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
தந்தை பெயரை துணைப் பெயராக சேர்க்கும் போது ஆணின் பெயராக, தங்கள் அடையாளம் மறுக்கப்படுவதாக எண்ணாத பெண்கள், கணவர் பெயரை சேர்க்கும் போது மட்டும் பெண்ணடிமைத்தனம் என கூறுவது முரண்.

கணவர் பெயரை துணைப் பெயராக சேர்த்தால் தவறு என்று கூறும் பெண்கள்,  தந்தை பெயர் சேர்ப்பதை பெருமையாக நினைப்பது என்பது ஒருவித போலித்தனமான மனநிலை தான். தந்தை வழி சமூகத்தின் பாதிப்பு என்ற அடையாளம் வந்துவிடக் கூடாது, ஆணாதிக்கத்திற்கு துணை போகிறார்கள் என்று பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சில பெண்கள் கணவர் பெயரை மட்டும் துணைப் பெயராக சேர்ப்பதை எதிர்க்கிறார்கள் . இத்தகைய செயல்,  சுய விருப்பத்தின் பேரிலேயே தந்தை அல்லது கணவர் பெயரை சேர்க்கும் பெண்களை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் கூட ஒரு வித ஆதிக்க மனநிலை தான்.  சுய விருப்பத்தின் பேரில், கர்வத்துடன் அல்லது ஆண்களுக்கு நிகரான தங்களது சாதனைகளை தங்கள் வீட்டு ஆண்களுக்கு புரியும் விதமாக உலகுக்கு உரக்க சொல்ல முனையும் பெண்களையும் ஒரே விதமான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. விரும்பி செய்யும் எந்த செயலும் அடுத்தவரை பாதிக்காதவரை ஏற்கத்தக்க ஒன்று தானே . பெயரில் என்ன இருக்கிறது என்பார்கள். பெயரில் தான் எல்லாம் இருக்கிறது .

– சுகிதா சாரங்கராஜ் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்-பள்ளி கல்வித் துறை உத்தரவு

Web Editor

சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!

Jeba Arul Robinson

உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!

Gayathri Venkatesan