முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

2022-ல் தேசிய அரசியலில் நிகழ்ந்த முக்கிய திருப்பங்கள்


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தேசிய அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், சர்ச்சைகளையும், சாதனைகளையும் 2022ம் ஆண்டு கடந்து வந்துள்ளது. 2022ம் ஆண்டில் தேசிய அளவில் அரசியலில் நிகழ்ந்த முக்கியமான 7 நிகழ்வுகளை காண்போம். 

5 மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி- இந்த ஆண்டு மத்தியில் ஆளும் பாஜகவிற்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்தது. 2022ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தர்காண்ட், இமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர், கோவா, ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வென்று வியப்பூட்டிய ஆம் ஆத்மி, டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை பிடித்தது. ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2 மாநில தேர்தலில் குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் பாஜக வென்றது. தொடர்ச்சியாக 7வது முறையாக அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்று மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் நிகழ்த்திய சாதனையை சமன் செய்தது பாஜக. இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்தது. இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குடியரசு தலைவர் தேர்தல்- இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும் பாஜக தனது பலத்தை நிரூபித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களம் இறங்கினார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் இறங்கினார். ஜூலை 18ந்தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் சுமார் 64 சதவீத வாக்குகளை பெற்று இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார்.

 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- குடியரசு துணை தலைவர் தேர்தலில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் களம் இறங்கினார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்கரெட் ஆல்வா களம் இறங்கினார். இதில் 74.50 சதவீத வாக்குகளை பெற்று 14வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிரடி ஆட்சி மாற்றங்கள்-  இந்த ஆண்டு அதிரடியாக 2 ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்த அதிரடி திருப்பம் நிகழ்ந்தது.  சிவசேனாவின் எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டு முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து உத்தவ் தாக்ரே ஆட்சி கவிழ்ந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. 122 இடங்களில் வென்றிருந்த போதும், முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவிற்கு விட்டுக்கொடுத்தது பாஜக. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட இந்த அதிரடி திருப்பம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், பீகாரில் அதிரடி அரசியல் மாற்றம் ஏற்பட்டு நாடெங்கிலும் பேசு பொருள் ஆனது. பாஜகவுடனான கூட்டணியை திடீரென முறித்துக்கொண்ட பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியையும், முதலமைச்சர் பதவியையும் தொடர்ந்தார். நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கை தேசிய அளவில் பெரும் பேசு பொருளானது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- ராகுல்காந்தி கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வந்தார். இதனை பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 17ந்தேதி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ராகுல்காந்தி தலைவர் தேர்தலில் களம் இறங்க வேண்டும் என எவ்வளவோ வலியுறுத்தியும், அவர் அதனை ஏற்கவில்லை. பல்வேறு திருப்பங்களுக்கு பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர்களான மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் இறுதிப்போட்டியாளர்களாக களத்தில் நின்றனர். இதில் 84.14 சதவீத வாக்குகளை பெற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராகுல்காந்தியின் நடைபயணம்- ராகுல்காந்தியின் அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் நிகழ்வாக கருதப்படும் ”இந்திய ஒற்றுமை”  நடைபயணம் கடந்த செப்டம்பர் 7ந்தேதி கன்னியாகுமாரியிலிருந்து தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ தூரத்திற்கு 150 நாட்கள் இந்த பயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ளார். 2023 ஜனவரி மாத இறுதியில் ஜம்மு காஷ்மீரில் ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவடைய உள்ளது. அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்றனர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராமராஜன், நடிகைகள் பூஜாபட், ரியாசென் உள்ளிட்ட பிரபலங்களும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றனர்.

தேசிய கட்சியான ஆம் ஆத்மி- ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டக்களத்தில் பூத்த பூவான ஆம் ஆத்மி தேசிய கட்சியாக இந்த ஆண்டு மலர்ந்துள்ளது. 2012ம் ஆண்டு, நவம்பர் 26ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி, 10 ஆண்டுகளில் தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி, குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 12.92 சதவீத வாக்குகளை பெற்று 5 இடங்களை கைப்பற்றியதன் மூலம் அம்மாநிலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவானது. இதையடுத்து 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாட்டின் முதல் சூரியசக்தி கிராமம்; பிரதமர் அறிவிப்பு

G SaravanaKumar

வைரலாகும் அதர்வாவின் ‘ட்ரிகர்’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!

EZHILARASAN D

அமெரிக்காவில் இன்று கொண்டாடப்படுகிறது ’தீபாவளி’

EZHILARASAN D