குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்துகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதன் முதலாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2023 ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதா்லாந்து, நியூஸிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
மொத்தம் 45 லீக் ஆட்டங்கள், 3 நாக் அவுட் என மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டமும் இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
வரும் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கம் இந்தியா பாகிஸ்தான் போட்டி 14-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறுகிறது.
அகமதாபாத்தில் அக். 4-ஆம் தேதி தொடக்க விழாவை கோலாகலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால் தொடக்க விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நிறைவு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.







