அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என 37 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று பேர் மட்டும் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பிளவையே ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருப்பவர்கள் தங்களது மொபைல்போனை கூட்ட அரங்கிற்கு வெளியே வைத்து விட்டு செல்லவும் என கூறப்பட்டது. அப்போதே இன்று ஏதோ முக்கிய முடிவினை எடுக்கவுள்ளனர் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. வழக்கமான கூட்டமாகதான் இருக்க என நினைத்தவர்களுக்கு முதல் அதிர்ச்சியே, கட்சியை வலுப்படுத்த ஒற்றை தலைமை தேவையா ? இல்லையா ? என்பது குறித்து மட்டும் கருத்து கூறுங்கள் என கூறினர். யார் என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறினர்.
அப்போது பேசிய பலரும் ஒற்றைத்தலைமை தேவை என்றே பேசினர். அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ஒரு படி மேலே சென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் எனக்கூறினார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதற்கு பெரிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பேசிய 40 பேரில் 37 பேர் ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே கட்சி கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல முடியும். இல்லையெனில் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என கோடிட்டு காட்டினர் எனக் கூறினர்.
மேலும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களாக அறியப்படும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் ஒற்றைத் தலைமை விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளனர். அவர்களும் ஒற்றைத்தலைமை வேண்டாம் என ஆணித்தரமாக கூறவில்லை. இதனை அங்கிருந்த ஓபிஎஸ் ரசிக்கவில்லை. அதேநேரத்தில் அவர் தமது கருத்தாக எதையும் தெரிவிக்கவில்லை. கூட்டம் முடிவடைந்தவுடன் வழக்கம்போல் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார் என நிர்வாகிகள் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான தராசு ஷ்யாமிடம் கேட்டபோது, அதிமுக கட்சி தங்களுக்கே சொந்தம் என ஓபிஎஸ் கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆணையம், [வழக்கு எண் 2017/20] இது தொடர்பாக பதில் அளிக்கும்படி அன்றையதினம் சசிகலாவிற்கு அன்று நோட்டீஸ் வழங்கியது. ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன், செம்மலை ஆகியோர் கட்சி தங்களுக்கே சொந்தம் எனக் கூறினர்.
இந்த வழக்கில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி கே பழனிசாமி பின்னாளில் இடைமறிப்பு மனுதாரராகதான் இருந்தார். இரு அணிகளும் ஒன்றிணையும்போது கட்சியின் சின்னம் போன்றவை ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் கையில் கொடுக்கப்பட்டது. இப்போது ஒற்றை தலைமை என வரும்போது, அதனை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார். மத்தியில் ஆளும் பாஜகவும் அதனை ரசிக்காது. மதுசூதனன் மறைந்துவிட்டார். ஏற்கனவே செம்மலையும் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளார். இவற்றை எல்லாம் கூட்டி கழித்து பார்க்கும்போது, ஓபிஎஸ் போட்டி பொதுக்குழுவை கூட்ட வாய்ப்புள்ளது. இவருக்கு பின்னால் இருந்து சசிகலா இயங்குவார் எனத்தெரிகிறது.
பாஜகவை பொறுத்தவரை வலுவான அதிமுக என்பது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல. இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றார். மேலும், பார்ம் ஏ மற்றும் பார்ம் பியில் இதுவரை இருவருமே இணைந்து கையெழுத்திட்டு வந்தனர். கட்சியில் பிளவு ஏற்பட்டால் கட்சியின் சின்னம் முழுமையாக முடங்குவதற்கு கூட வாய்ப்புள்ளது என்கிறார் தராசு ஷ்யாம்.
அதிமுகவில் இரட்டை தலைமை என்பதை மாற்றினால், அது அந்த கட்சியின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். இதனைதான் மத்தியில் ஆளும் பாஜகவும் விரும்புகிறது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தராசு ஷ்யாம் கூறுகிறார்.
அதிமுகவில் தொடங்கியுள்ள பனிப்போர் வரும் நாட்களில் முக்கிய விவாதப்பொருளாக மாறும் என்பதில் ஐயமில்லை
இராமானுஜம்.கி, விக்னேஷ்வரன். இரா










