அதிமுக- பாஜக கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில், கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது. இதனை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று முன் தினம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனையடுத்து நேற்று இரவு கோவை வந்த நிர்மலா சீதாராமனை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். அப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் உடனிருந்தார். இதனை தனது x தளத்தில் நிர்மலா சீதாராமன் பதிவிட்டு தன்னை அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்றதாக தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு முதல்முறையாக அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







