அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து புகார் மனு அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மற்றும் செங்கல்பட்டு அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே பகுதியை சேர்ந்தவர்கள் குடித்து 23 பேர் அடுத்தடுத்து பலியான நிலையில், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டு எஸ்பி உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக அதிமுக கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், பெருந்திரளான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பேரணியாக சென்னை, சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டனர்.
இந்த பேரணியில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை அருகிலேயே அதிமுகவினர் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் கள்ளச்சாராயம் மரணம், போலி மதுபானம், திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கிடையில், இந்த பேரணியில், கலந்து கொள்வதற்காக, அதிமுகவினர் ஏராளமானோர் சைதாப்பேட்டையில் குவிந்தனர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைத்து இருந்ததால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சைதாப்பேட்டை , வேளச்சேரி, கிண்டி, அடையாறு ஆகிய சாலைகள் முழுவதும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொளுத்தும் வெயிலில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
- பி.ஜேம்ஸ் லிசா