ஆம்பூரை அடுத்த கரும்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் இந்து மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது 40,000 நிதி உதவியை முன்னாள் மாணவா்கள் வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த கரும்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி பெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் 1998 மற்றும் 2000 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்போதைய ஆசிரிய பெருமக்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு, கல்வியால் தாங்கள் அடைந்த பயன் குறித்து வெளிப்படுத்தி தங்களது அன்பை பரிமாறி கொண்டனர்.
பின்னர் ஆசிரிய பெருமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள், வரும் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு நிதி பெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயிலக்கூடிய ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 40 ஆயிரம் ரூபாய்கான காசோலையை நன்கொடையாக வழங்கினர். மேலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பயிலக் கூடிய வகையில் நிதியுதவி அளித்த முன்னாள் மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ரூபி.காமராஜ்







