அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தது – தவெக அரசுக்கு தெரிவித்த ஆதரவு வாபஸ்!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் என 2 ஆக பிரிந்தது. இதில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். தொடர்ந்து இரண்டு தரப்பினரிடையே பிரச்சினை அதிகரித்து வந்த நிலையில் அதிமுக கொறடாவாக தங்களை நியமிக்கக்கோரி இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் 6 பேர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர்.

இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் தற்போது ஒன்றாக செயல்பட முடிவு செய்ததை அடுத்து அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் இரு தரப்பினரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் இல்லத்தில் இருந்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர். இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்துக்கு சென்று, கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தையும் திரும்ப பெற்றனர். ஒரே அணியாக இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர். அதேபோல, அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக் கோரியும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இரு அணிகள் இணைப்பால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 42ஆக உள்ளது. மோதல் முடிவுக்கு வந்ததால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.