சசிகலாவுக்கு எதிராக அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அரசியல் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரிலேயே தொடர்ந்து பயணித்து வந்தார். ஆனால், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை தி.நகர் எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு கடந்த 17ஆம் தேதி அதிமுக கொடியுடன் கூடிய காரில் சென்ற சசிகலா, அங்கு அதிமுக கொடியை ஏற்றிவைத்தார். பிறகு அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதில் ’கழக பொதுச்செயலாளர் சசிகலா’ எனவும் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாகவும், கல்வெட்டில் பொதுச் செயலாளர் என இடம்பெற்றது குறித்தும் மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். சட்டவிரோதமாக அதிமுகவின் பெயரை பயன்படுத்தும் சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சசிகலா முயற்சிக்கிறார், சசிகலாவின் நடவடிக்கைகள் நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிரானது. அதிமுகவின் கொடி, பெயரைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று கூறினார்.
மேலும் அதிமுக கொடி கட்டிய காரில் சென்றால் ஜெயலலிதா ஆகிவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், சசிகலாவால் பதட்டமடைவது ஊடகங்கள் தான், அதிமுகவினருக்கு எந்த பதட்டமும் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.