நடிகர் சிம்புவின் திரைப்படங்கள் திட்டமிட்டு முடக்கப்படுவதாக அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், சில வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர்.
புகார் மனு அளித்த பின், டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநாடு திரைப்படத்தை முடக்க முயற்சிக்கின்றனர். சிம்புவுக்கு நெருக்கடி கொடுக்கவே இவ்வாறு செய்கின்றனர் எனவும், சிம்புவிற்கு மட்டுமல்ல அனைத்து நடிகர்களுக்கும் கட்டப்பஞ்சாயத்து பிரச்னை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாக கூறிய டி.ராஜேந்தர், தமிழ் திரைப்பட நடப்பு விநியோக சங்கத்தில் இருக்கும் அருள்நிதி என்பவரே, இதற்கு காரணம் என குற்றம்சாட்டினார். சிம்புவின் திரைப்படங்கள் திட்டமிட்டு முடக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார்.








