அண்ணாமலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தேசிய தலைமையை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அப்போது நடைபெற்ற ஊழலால் தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறியது என்றும், அது தான் ஊழல்களிலேயே முதன்மையானது என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
மேலும் பாஜகவை வலுப்படுத்துவேன் என கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக வலிமையான கட்சி என குறிப்பிட்டாலும், அதில் மனநிறைவு அடைய முடியாது. இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைவது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் அதில் என்றும் பாஜக தலையிடாது. அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலைச் சின்னம் ஆகிய விவகாரங்களில் பாஜக நடுநிலை வகிப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அதிமுக மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
மேலும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பாஜக தலைமையை வலியுறுத்தவும், கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவதால் அவரை கண்டிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதவிர தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் பாஜக நான்கு தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக-பாஜக கூட்டணியை தொடர்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதனாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா









