தவெக அரசைக் கண்டித்து டிச. 2-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மேகதாது விவகாரத்தில் மௌனம் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தவெக அரசைக் கண்டித்து, வரும் டிசம்பர் 2-ம் தேதி அதிமுக சார்பில் 85 நிர்வாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் 85 நிர்வாக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் மௌனம், விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தவெக அரசு செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.

இதனைக் கண்டித்து, அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களிலும் வரும் டிசம்பர் 2-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை!

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாகவும், கொலைச் சம்பவங்கள் தொடர்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம், துறையூர் தவெக எம்.எல்.ஏ. மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான புகார், பெண் காவலரிடம் அமைச்சர் விசாரணை நடத்திய விவகாரம் உள்ளிட்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், செஞ்சி அருகே காணாமல் போன சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாதது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு, மேகதாது விவகாரத்தில் அரசுக்கு கண்டனம்!

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்கட்டண உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டுகளால் மக்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் குறுவை மற்றும் சம்பா சாகுபடியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளான ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என விமர்சித்துள்ளார்.

நிர்வாகச் சீர்கேடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தத் திட்டம்!

தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டங்களில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மகளிர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.