அரசியலமைப்பு நாள்: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26-ம் தேதியான இன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் (Constitution Day) அல்லது சம்விதான் திவாஸ் (Samvidhan Divas) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், நமது நாட்டின் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூகநீதியின் வழிகாட்டியாகவும் திகழும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று.

ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையையும், சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் உறுதிசெய்யும் உன்னதமான ஆவணத்தை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்நாளில் மரியாதை செலுத்துவதோடு, அரசியலமைப்பின் மாண்பையும், ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், நமது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் நாளை, இந்திய அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதற்கும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் கடமைகளையும் உறுதிப்படுத்துவதற்கும் வழிகாட்டும் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அளப்பரிய பங்காற்றிய சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும், ஜனநாயக விழுமியங்களையும் போற்றிப் பாதுகாத்து, வலிமையான, வளர்ச்சியடைந்த, ஒற்றுமைமிக்க பாரதத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம். அனைவருக்கும் எனது இனிய இந்திய அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட இந்தியத் திருநாட்டின் பெருமைமிகு அடையாளம் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம்!

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி ஆகிய உயரிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் அர்ப்பணிப்பால் உருவான நமது அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உரிமைகளையும் மாண்பையும் உறுதி செய்கிறது.

நமது தேசத்தின் இறையாண்மையையும் ஜனநாயக விழுமியங்களையும் போற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெருமையை என்றும் காப்போம்! அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளை மதிப்போம்; அது வலியுறுத்தும் கடமைகளைப் பின்பற்றி பெருமைமிகு இந்தியாவை உருவாக்குவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.