ஆளுநரிடம் உதயநிதி புகார்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது சிபிஐ விசாரணை கோரிக்கை!

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, ஆளுநர் அர்லேகரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு அளித்துள்ளார்.

ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து உதயநிதி மனு!

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழக ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்தார். அப்போது, பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தியும், புகார் அளிக்க வந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆளுநரிடம் மனு அளித்தார். ஏற்கெனவே, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக டிஜிபியிடமும் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்திருந்தார். பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

116 நாட்களாகக் குற்றத்தை மறைக்க முயற்சி – உதயநிதி குற்றச்சாட்டு!

“கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. நேற்றைய தினம் கைது செய்யப்படுவார் என அனைவரும் நேற்று எதிர்பார்த்தோம். ஆனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் நான் கொடுத்த பேட்டியை நீக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டுள்ளனர். இன்று தமிழக கவர்னரை சந்தித்து, தவெக ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, எனவே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.

கடந்த ஜூலை 31-ந்தேதியே தலைமை செயலாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் 116 நாட்களாக தலைமை செயலாளர் குற்றத்தை மறைக்க முயற்சி செய்துள்ளார். முதலமைச்சருக்கு இந்த விவகாரம் தெரியாதா? அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரா? அப்படி இருந்தால், அவரும் இந்த குற்றத்தில் சேர்க்கப்பட வேண்டும். முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் குற்றவாளிகள் பக்கம் நிற்கிறார். மேலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என கடந்த ஒரு மாத காலமாக 3 அமைச்சர்கள் சொன்னார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் புகார்!

மேலும், தவெக ஆட்சியில் பெண் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தினசரி செய்தியாக மாறிவிட்டதாகவும், ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் 9 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். செஞ்சி சிறுமியை விரைந்து கண்டுபிடிக்கக் கோரினால், அதற்கும் காவல் நிலையத்தில் யாகம் செய்கிறது தவெக அரசு என்றும் விமர்சித்தார். செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணமடைந்த விவகாரத்தில் தற்கொலை என அரசு பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஆளுங்கட்சியினரே சிக்குவதாகவும், இதன் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெரிய நெட்வொர்க் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சித்த உதயநிதி, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.