பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிகத்திற்கான கொள்கையாக மாற்றப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது, நாங்கள் மக்களின் குரல்களைக் கேட்டோம். இந்த நடைபயனத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரிடம் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பற்றி நாங்கள் கேட்கிறோம். பலர் வேலையில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர். விவசாயிகள், பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் பணம் பெறவில்லை என்று கூறுகின்றனர். பழங்குடியினரின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.
அக்னிபாத் திட்டம், ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாக மக்கள் எங்களிடம் கூறினர். இத்திட்டத்தில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் திருப்பி இந்த சமூகத்திற்கே அனுப்பி வைக்கப்படுவதால், இது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அக்னிபாத் திட்டம் ஆர்எஸ்எஸ், உள்துறை அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது என்றும், ராணுவத்தால் கொண்டுவரப்பட்டது அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இடம் பெற்ற குடியரசுத் தலைவரின் உரையில், வேலையின்மை, பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இல்லை.
தமிழ்நாடு தொடங்கி இமாச்சலப் பிரதேசம் வரை, இந்தியா முழுவதும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும், ‘அதானி’, ‘அதானி’, ‘அதானி’ தான்… அதானி எந்த தொழிலில் இறங்கினாலும், அவருக்கு தோல்வி ஏற்படுவதில்லையே! இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்டனர்.
அதானி, இப்போது 8 முதல் 10 துறைகளில் கால் பதித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, அவரது நிகர சொத்து மதிப்பு 800 கோடி ரூபாயிலிருந்து, 14 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் கேட்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அதானியுடனான அவரது உறவு தொடங்கியது. பிரதமர் மோடியுடன் தோளோடு தோள் நின்று, பிரதமருக்கு விசுவாசமாக அவர் இருந்தார். 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் விளைவாக, அதானிக்கு 6 விமான நிலையங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு, இந்தியாவின் அதிக லாபம் ஈட்டும் மும்பை விமான நிலையம் உள்ளிட்டவையும் அதானிக்கு வழங்கப்பட்டன.
விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சி தொடர்பான பணிகளில் ஈடுபட கூடாது என்ற விதி உள்ளது. இந்த விதி இந்திய அரசு மீறிவிட்டது. அதானிக்கு இப்போது பாதுகாப்புத் துறையில் அனுபவம் இல்லை. நாங்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நேற்று பிரதமர் கூறினார்.
என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார். எஸ்பிஐ வங்கி அதானிக்கு 100 கோடி ரூபாய் கடனாக வழங்கியது. வங்கதேசம் சென்றார். அந்த நாட்டு மின்துறை வளர்ச்சி வாரியம் மற்றும் அதானிக்கு இடையே 25 ஆண்டுகள் ஒப்பந்தம் கையெழுத்தானது.
2022 ஆம் ஆண்டில், அதானிக்கு காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்க இந்திய பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக, இலங்கை அதிபர் ராஜ்பக்சே தன்னிடம் கூறியதாக இலங்கை மின்சார வாரியத் தலைவர் தெரிவித்தார். இவை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வணிகத்திற்கான கொள்கை” என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.