அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ‘நேஷனல் ஹெரால்டு’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தது பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது. யங் இந்தியன் நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தலா 76 சதவீத பங்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 2014ல் பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சாமி, ரூ. 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் அசோசியட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை வெறும் ரூ.50 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெருமளவிலான முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டி அமலாக்கத்துறையில் புகார் அளித்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, தனிநபர் அளித்த புகார் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில் தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தின் உத்தரவு பி.எம்.எல்.ஏ சட்டத்தின் மீறுவதாகவும், 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய தொகைக்கு 2000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நிறுவனம் பெற்றுள்ளதாக வாதிடப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு மனு மீது சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை 2026 மார்ச் 12ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.







