தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வு முடிவு இன்று வெளியானது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான இந்தியா தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்தியா தகவல் தொழில்நுட்ப கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2023-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8,23,967 தேர்வர்கள் இதனை எழுதியிருந்தனர். இதில் 2,56,686 பேர் பெண்கள். தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் நேற்று வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்த முடிவுகளில் 20 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இவர்களில் 14 பேர் பொதுப்பிரிவினரும் 4 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.







