“ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்” – அமைச்சர் சிவசங்கர்

நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துத்துள்ளார்.  சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி…

நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துத்துள்ளார். 

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’  என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு,  சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.  தற்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும்,  சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும்,  பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லவும் போதிய வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி அடைகின்றனர்.  இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: அயோத்தி ராமர் கோயில் நடைதிறப்பு – கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!

ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.  ஆனால்,  கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் பணிமனையை திறந்துவைத்த அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அரசு விரைவுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் போது ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவதுதான் சரியாக இருக்கும்.  ஜன.24-ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும்.
ஊழியர்கள் குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது உண்மைதான்.  அதற்காக அறிவிப்புகள் வெளியிட்டு தொடர்ந்து நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன,  தகுதியான் ஓட்டுநர்களை பணியில் சேர்க்க சில நாள்கள் ஆகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.