செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு உலகமே வியக்கும் வண்ணம் நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் கொடிகள் அடங்கிய வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியாக தாலிபான் தீவிரவாத அமைப்பின் கொடி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அரசின் கவனத்திற்கு சென்றவுடன் தற்போது மறைக்கப்பட்டுள்ளது.
செஸ் ஓலிம்பியாட்-2022 தொடரில் 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்டில் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் ஓபன் பிரிவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் திடீரென விலகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், செஸ் ஒலிம்பியாட் தொடரில் 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீரர்கள் பங்கேற்கின்றனர். செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, சீனா இம்முறை பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் இதில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் கொடிகளை வரிசைப்படுத்தி வரவேற்பு பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியாக தாலிபான் தீவிரவாதிகளின் கொடி படம் இடம் பெற்றிருந்தது. ஆப்கானிஸ்தான் ஆட்சியை முழுமையாக கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த கொடியை அகற்றிவிட்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தங்களது அமைப்பின் கொடியை ஆப்கானிஸ்தானின் தேசிய கொடி என அறிவித்துள்ளனர்.
இந்த கொடிதான் தங்களது தேசிய கொடி என அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அங்கீகரித்து அந்த கொடி செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் தாலிபான் தீவிரவாத அமைப்பின் கொடிதான் ஆப்கானிஸ்தான் கொடியாக உள்ளது. எனவே இதனை அங்கீகரிப்பது அவர்களது செயல்களை ஆதரிப்பதுபோல் அமைந்துவிடும். எனவே இதனை அங்கீகரிக்க வேண்டாம் என போட்டி அமைப்பாளருக்கு அரசிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனையடுத்து அந்த பதாகைகளில் இருந்த கொடி உடனடியாக மறைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் தீவிரவாத பிரச்சனை உலக நாடுகளை பல்வேறு வகையில் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சதுரங்க போட்டி நடைபெறும் இடத்தை சுற்றி பூஞ்சேரி, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இராமானுஜம்.கி