முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

அமெரிக்கா – சீனா முட்டிக்கொள்ளுமா? விட்டுத்தள்ளுமா?


ஜெயகார்த்தி

கட்டுரையாளர்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப் பயணம் சீனா – அமெரிக்கா இடையே மிகப்பெரிய சர்ச்சை எழுப்பி உள்ளது. சீன எதிர்ப்பின் பின்னணி என்ன? அதையும் மீறி அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதிகளின் பயணத்திற்கு காரணம் என்ன என்பதை அலசுகிறது இந்த செய்திக் கட்டுரை…

சீனா Vs தைவான்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீனா – தைவான் சர்ச்சை இன்று நேற்று தொடங்கியது அல்ல. அது இரண்டாம் உலகப் போரைத் தொடரந்து, சீனாவில் உள்நாட்டுக் கலவரம் ( 1945 – 1949) தொடங்கிய போது உருவானது. தைவானோ, தன்னைத் தானே தனிநாடாக அறிவித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ அதனை ஏற்க மறுத்து, தைவான் தன்னுடைய நாட்டின் ஒரு அங்கம் தான் என்று கூறி வருகிறது. தைவானை தனி நாடாக யாரும் அங்கீகரிக்கக் கூடாது என்பது சீனாவின் வாதமாக இருந்து வருகிறது. அத்துடன் 2049ம் ஆண்டில், அதாவது சீனாவின் 100வது சுதந்திர தினவிழாவில் தைவான், சீனாவுடன் ஐக்கியமாக வேண்டும் என்று நிபந்தனை விதித்து செயலாற்றி வருகிறது. தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுக்கும், அப்படி குறிப்பிடும் நாடுகளின் தலைவர்களுக்கும் கடுமையான எதிர்வினையை ஆற்றி வருகிறது சீனா.

சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க சபாநாயகரின் பயணம்

இந்த நேரத்தில் தான் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி ஃபெலோசி, தைவானுக்கு பயணம் செய்யப்போகிறார் என்று தெரிந்தவுடனேயே சீனா கொந்தளிக்கத் தொடங்கிவிட்டது. சீனாவின் அதிபர் ஸீ ஜின்பிங்கே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது எதிர்ப்பினைப் பதிவு செய்தார். அவருடைய பயணத்திற்கு கடுமையான எதிர்வினை இருக்கும் என்றும் எச்சரித்தார்.

அதையும் மீறி ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் சென்ற நான்சி ஃபெலோசி, தைவான் பெண் அதிபர் டாய் இங் வென் (Tsai Ing-Wen)-ஐ தலைநகர் தைபேயில் உள்ள அதிபரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தமது பிரதிநிதிகளுடனான தைவான் பயணம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர் குறிப்பிட்டார். தைவானின் மிகச்சிறந்த ஜனநாயகத்திற்கு அமெரிக்கா, தனது அசைக்க முடியாத ஆதரவை அளிக்கும் என்று கூறினார். இந்த பயணத்தின் போது, தைவான் நாடாளுமன்றத்தைப் பார்வையிட்டு கலந்துரையாடினார்.

சீனாவின் ராணுவ ஒத்திகை என்பது தேவையற்றது என்றும், சவால்நிறைந்த காலத்தில் அரிக்கக பிரதிநிதிகளின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும் தைவான் அதிபர் டாய் இங் வென் குறிப்பிட்டார்.

யார் இந்த நான்சி பெலோசி?

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவராக இருக்கும் நான்சி ஃபெலோசி, அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உயரதிகார மையமாவார். அத்துடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்கு சென்ற அமெரிக்க பிரதிநிதியுமாவார். அமெரிக்காவை ஆளும் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.

“தைவானுக்கு அரசு முறைப் பயணம் செய்வதன் மூலம், தைவானின் சுதந்திரத் தன்மையை, ஜனநாயகத்தை கௌரவிப்பதாக” நான்சி ஃபெலோசி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சீன அரசின் செய்தித் தொடர்பாளர் ஹூ சுன்யிங், “ஒரே சீனா ” கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்ப்பும், வரவேற்பும்

நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தனது வான்வெளியில் அவரது விமானம் பறந்தால் பின்தொடர்ந்து, இடைமறித்து, அதை கட்டாயமாக தரையிறக்கம் செய்ய நேரிடும் என்றும் வெளிப்படையாக எச்சரித்தது. அத்துடன் கடல்பகுதியிலும் பன்மடங்கு ராணுவத்தைக் குவித்து, பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபட்டது. சீனாவின் 27 போர் விமானங்கள் தைவானின் வான்வெளியில் பறந்ததாக தைபே தெரிவித்துள்ளது.

 

சீன வெளியுறவுத்துறையோ, பெலோசியின் பயணம், சீன – அமெரிக்க உறவில் பாதகத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன், சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகவே அமெரிக்க பயணம் பார்க்கப்படும் என்று குறிப்பிட்டார். சீன அரசாங்கம் வெளிப்படையாகவே எதிர்ப்பை தெரிவித்த நிலையில், தைவானில் உள்ள சீன ஆதரவாளர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதே நேரத்தில் தைவான் நாட்டு மக்களோ, அமெரிக்க குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர்.

சீன – அமெரிக்க உறவில் விரிசல்?

சீனா அதிபராக ஸி ஜின்பிங் பதவியேற்ற பிறகு, இருநாடுகளுக்கு இடையே உரசலற்ற போக்கே நீடித்து வருகிறது. என்றாலும் நான்சி பெலோசியின் பயணம் அதற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்கிறார் தி நியுயார்க் டைம்ஸ் இதழின் கட்டுரையாளரான தாமஸ் எல். ஃபீட்மேன்.

நான்சி பெலோசியின் பயணம் பொறுப்பற்றது, அபாயகரமானது மற்றும் தேவையற்ற ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெலோசியின் பயணத்ற்கு பிறகு, தைவான் அரசானது மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

முட்டிக்கொள்ளுமா? விட்டுத்தள்ளுமா?

சீனாவோ, ஒரே சீனா என்றும் தைவான் தனது அங்கம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பருந்திடம் சிக்கிக்கொண்ட பட்டாம்பூச்சி போல இருக்கும் தைவானோ, தன்னை தனி நாடாக அங்கீகரிக்கப் போராடி வருகிறது. ஆனால் தைவான் சென்ற நான்சி பெலோசியோ, தைவானின் சுதந்திரத்தன்மையையும், ஜனநாயகத்தையும் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டிற்கு சீனா நிச்சயம் எதிர்வினையாற்றாமல் விடாது. அதே நேரத்தில் நான்சி பெலோசியின் தைவான் பயணம், தங்கள் நாட்டிற்கு மலையைப் போன்ற ஆதரவை வழங்கியிருப்பதாக தைவான் கூறியிருக்கிறது. உலகின் பொருளாதார, ராணுவ வல்லரசுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனா இந்த விவகாரத்தில் முட்டிக்கொள்ளுமா? விட்டுத்தள்ளுமா என்பது சீன அதிபர் ஜி ஜின்பிங் எடுக்கும் வியூகத்தைப் பொறுத்தே அமையும்.

– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

Niruban Chakkaaravarthi

நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்

Web Editor

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்; நொடிப் பொழுதில் காப்பாற்றிய காவலர்கள் – வீடியோ

Jayapriya