வெள்ள முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, வானிலை முன்னெச்சரிக்கை, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு ஆகியவை குறித்து முதல்வர் ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர்  அறிவுறுத்தினார்.

ஆகஸ்ட் 4 முதல் 6ஆம் தேதி வரை குமரிமுனை, மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவித்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம்.

கன மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும், போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது என்றும், குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதேபோல, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளையும் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து நிலை அலுவலர்களும் கரையோரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திடவும் அறிவுறுத்தினார். முக்கியமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சில இடங்களில் மழையில் வீணாகிவிடுவதாக செய்திகள் வருகின்றன. நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும் என்றும், உடனடியாக அவற்றை சேமிப்பு கிடங்குகளில் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விழிப்போடு இருந்து இந்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.