”அதிமுக சமுத்திரம்; ஓபிஎஸ் அதில் ஒரு சொட்டு தான்” – ஜெயக்குமார் விமர்சனம்

சமுத்திரம் போல் அதிமுக உள்ளது. அதில் இருந்து ஓபிஎஸ் எனும் ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு…

சமுத்திரம் போல் அதிமுக உள்ளது. அதில் இருந்து ஓபிஎஸ் எனும் ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் , கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், பி.கே.எம்.சின்னையா, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “காலத்தால் அழிக்கமுடியாத காவியமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று நடைபெற்றுள்ளது. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று கூறும் வகையில் திரளான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

அதிமுகவில் பிரிவும் இல்லை, பிளவும் இல்லை. அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்டுள்ளனர். அதை பிளவாக பார்க்க முடியாது. சமுத்திரம் போல் அதிமுக உள்ளது. அதில் இருந்து ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது. 4 பேரை கூட்டி வந்து அஞ்சலி செலுத்திவிட்டால் அது அணிகள் ஆகுமா? அது அணிகள் அல்ல, பிணிகள்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.