தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு
வலுப்பெற்று வங்க கடலில் டிசம்பர் 8 ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல்-மலாக்கா ஜலசந்தி ஆகியவற்றில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியின் தாக்கத்தின் கீழ், தெற்கு அந்தமான் கடல் மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது டிசம்பர் 06 மாலையில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பிறகு, இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் படிப்படியாக ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற்று, டிசம்பர் 08-ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது, இதனால் புதுச்சேரியில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்களும் கரை திரும்பி வருகின்றனர். இந்நிலையில் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக தேங்காய்திட்டு மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.