சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, நெல்லை, தர்மபுரி, தேனி, விருதுநகர், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







