அதிமுக – பாஜக வார்த்தைப் போரும் எதிர்க்கட்சி அரியணையும்

திமுக அரசின் ஓராண்டு சாதனைகள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம், என திமுக தொண்டர்கள் படு பிஸியாக இருக்கின்றனர். ஆனால், திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் அதிமுக, பாஜக இரு கட்சிகள்…

திமுக அரசின் ஓராண்டு சாதனைகள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம், என திமுக தொண்டர்கள் படு பிஸியாக இருக்கின்றனர். ஆனால், திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் அதிமுக, பாஜக இரு கட்சிகள் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான போட்டியில் தீவிரமாக உள்ளன.

அதிமுக – பாஜக முற்றும் மோதல் :
2021 சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே திமுக அரசை பாஜக கடுமையாக விமர்சிக்கும் போக்கை தொடங்கிவிட்டது. சட்டமன்ற கூட்டத் தொடரில், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரின் வெளிநடப்பு அரசியலைத் தாண்டி, திமுக அரசு பற்றிய அவர்களின் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை பார்த்திருக்கிறோம். இதை விட வேகமாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்கள் மன்றத்திலும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதாவது, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. நிலக்கரி முறைகேடு, திமுக அரசின் ஊழல் பட்டியல் தயார் என அவர் அடுக்கடுக்காக கூறும் குற்றசாட்டுகள் பாஜகவை ஊடக வெளிச்சத்திலேயே வைத்திருக்கின்றன. அதே சமயத்தில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான ஆவணங்களை அண்ணாமலை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிட­வில்லை என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. தொடர்ச்சியாக திமுக அரசை அண்ணாமலை எதிர்ப்பது, திமுக – அதிமுக இருதுருவ அரசியலுக்கு மாற்றாக, திமுக – பாஜக என்ற எதிர் துருவ அரசியல் கட்டமைக்கப்பட்டுவிட்டதா என்ற எண்ணத்தையும் தோன்றச் செய்கிறது. இதற்கு உரம் போடும் வகையில் தான் அமைந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை.

மத்திய அரசின் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தது. பிரதமரின் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, நேரு உள்விளையாட்டு அரங்கில் திமுக – பாஜக தொண்டர்கள் எழுப்பிக்கொண்ட கோஷங்கள் இரு கட்சிகளுக்கு இடையிலான மோதலை மேலும் வலுப்பெற செய்தது. அதன் உச்சமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உரை அமைந்தது.
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி அதிமுகவிற்கு பாதகமானது என்ற அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கருத்து, இந்த விவகாரத்தில் மேலும் கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியது. அதே போல், அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் கே ராஜூ பேச்சையும் கவனிக்க வேண்டி உள்ளது. முருகன் வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது, இதனால், பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா? என கேள்வி எழுப்பினார். “அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால் நாங்கள் தூணை கொண்டு எறிவோம்” என காட்டமாகவும் எதிர்வினை ஆற்றினார். அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், செல்லூர் கே ராஜூவின் கருத்துகளில் இரண்டு தன்மைகள் வெளிப்படுகின்றன. ஒன்று, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக என்பதை இருவரும் அழுத்தமாக சொல்ல முயலுகின்றனர். இரண்டாவது, அதிமுகவை வலுவிழக்க செய்து பாஜக அந்த இடத்தைக் கைப்பற்ற நினைக்கிறது என்ற விமர்சனத்தை மாற்ற அதிமுக முயலுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளை ஒட்டித் தான் அதிமுக நிர்வாகிகளின் பேச்சுகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் யார் எதிர்க்கட்சி?:
யார் எதிர்க்கட்சி என்ற விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் அதிமுக – பாஜகவின் வாக்கு வங்கிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 40.77 சதவீத வாக்குகளைப் பெற்றது. 188 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 2.84 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக மாறிய அதிமுக வசம் 33.29 சதவித வாக்கு வங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்த பாஜக 2.62 சதவிதம் வாக்குகளையே பெற்றது. மக்கள் அங்கீகாரத்துடன் அதிமுகவின் 65 எம்.எல்.ஏக்களும், பாஜகவின் 4 எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்தில் உள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கூட அதிமுக 25.47 சதவீத வாக்குகளையும் பாஜக 4.92 சதவீத வாக்குகளையும் கைவசம் வைத்துள்ளன. ஒட்டு மொத்தத்தில் பார்க்கும் போது, சட்டமன்ற பிரதிநிதித்துவத்தில் அதிக எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளதும், அதிக வாக்கு வங்கியை வைத்திருப்பதன் அடிப்படையிலும் அதிமுக தான் எதிர்க்கட்சியாக உள்ளது. தங்களின் வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ள, அல்லது ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக தொடர்ந்து கட்சிகள் பேசுவதன் மூலமாக மட்டுமே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட முடியாது. ஆளும் கட்சியான திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் யார் தீவிரமாக செயல்படுகிறார்கள் என்பதற்காக தான் தாங்கள் எதிர்க்கட்சி என்ற கோஷத்தை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேசுவதையும் பார்க்க முடிகிறது.

“ஜனநாயகத்தில் புதிய சர்வாதிகாரம் வாரிசு அரசியல்”

அதிமுக – பாஜக : களத்தில் முந்துவது யார்?
தமிழ்நாட்டில் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து பாஜக உடனுக்கு உடன் போராட்டத்தில் ஈடுபடுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, காவிரி மீட்பு போராட்டம், திருவாரூர் போராட்டம் என மக்களை திரட்டி தீவிர அரசியலை பாஜக கையில் எடுத்து வருகிறது. இந்த போராட்டங்களில் கூடிய கூட்டம் பாஜகவை வலுவான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு கொண்டு செல்வதாக பாஜக நிர்வாகிகள் நம்புகின்றனர்.
அதே நேரத்தில், கடந்த ஓராண்டில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி கே.பி. அன்பழகன் தொடர் ரெய்டுகள் நடந்தன. இதன் காரணமாக, மக்கள் பிரச்னைக்காக அந்த கட்சி நிற்க முடியாத சூழலையும், அத்துடன் அதன் உட்கட்சி பிரச்னைகளையுமே பேசப்பட்டு வருவதையும் கவனிக்க முடிகிறது.
மொத்தத்தில், திமுகவை கடுமையாக எதிர்ப்பதில் அதிமுகவை விட பாஜக சற்று வேகம் காட்டினாலும் உண்மையான எதிர்க்கட்சியாகவும், பாஜகவுடன் ஒப்பிடும் போது மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ள கட்சியாகவும் இருப்பது அதிமுகவே. ஆகவே, எதிர்க்கட்சி அரியணையை அதிமுகவிடம் இருந்து பாஜக தட்டிப்பறிக்கிறதா என்பதை 2024 நாடாளுமன்ற தேர்தலில், முடிவுக்கு வந்துவிடும்.

 

இதுதொடர்பான வீடியோக்கள் – https://www.youtube.com/watch?v=KrfmYJNDQac

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.