கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முன் இருக்கும் ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதும் மட்டுமே ஆகும்.
கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான அனுமதி கிடைத்துவிட்டது. தற்போது கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கும் இந்த அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு அல்லது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து இதில் ஏதாவது ஒன்றை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் கூட பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸை செலுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், பயோலாஜிக்கல் இ தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் இந்த வகையான முதல் தடுப்பூசி என்ற பெயரை பெற்றுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.
தற்போது 12 வயது முதல் 18 வயதுக்குள்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிக்கு டிசிஜிஐ கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கியது. தற்போதைய அனுமதியின் மூலம், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பேவாக்சை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டவர்கள் 6 மாதங்கள் கழித்து கோர்பேவாக்சை அவசர சூழ்நிலை என்றால் செலுத்திக் கொள்ள முடியும் என்று பயோலாஜிக்கல் இ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையை ரூ.840 இல் இருந்து ரூ.250ஆக குறைத்துள்ளது. இது தனியார் தடுப்பூசி மையங்களுக்குதான் பொருந்தும்.
அரசு தடுப்பூசி மையங்களுக்கு ரூ.145 என நிர்ணயித்துள்ளது.
-மணிகண்டன்







