லத்தீன் இசையின் ராணி என அன்புடன் அழைக்கப்படும் ஷகிரா, இத்தாலி கால்பந்து வீரர் ஜெராட் பிக்கே ஆகியோர் 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இந்த ஜோடி இன்று பிரிவதாக அறிவித்தது.
இந்த ஜோடிக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். பிரிவது தொடர்பாக அவர்கள் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “நாங்கள் பிரிவதை உறுதிப்படுத்துகிறோம். இதற்காக வருந்துகிறோம். நாங்கள் எப்போதுமே எங்களது குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை அளிப்போம். அதனால், அவர்களது தனியுரிமைக்கு நீங்கள் (ரசிகர்கள்) மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக ஷகிரா பாடி, நடனமாடிய “திஸ் டைம் ஃபார் ஆப்பிரிக்கா” பாடல் வெளியானது. அப்போது தான் ஜெராட்டை ஷகிரா சந்தித்தார். அதன் பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கினார். இந்நிலையில், 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து குழந்தைகளும் இருக்கும் நிலையில், இந்த ஜோடி பிரிவதாக அறிவித்துள்ளது இவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/news7tamil/status/1533078353095585792
கொலம்பியாவைச் சேர்ந்த ஷகிரா, 1977 ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி பிறந்தார்.
பாடலாசிரியர், பாடகி, நடனக் கலைஞர், நடிகை என பன்முகக் கலைஞராவார். பாப், ராக், லத்தீன் இசையில் பாடக் கூடியவர். இசை உலகில் வழங்கப்படும் உயரிய விருதுகளான கிராமி விருதை 3 முறையும், லத்தீன் கிராமி விருதை 12 முறையும் வென்றிருக்கிறார்.
இவர் பாடிய ஹிப்ஸ் டோன் லை, பியூட்டிஃபுல் லையர், வாகா வாகா உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்கள் மிகவும் பிரபலமானவையாகும். ஷகிராவுடன் ஒன்றாக வாழ்ந்த ஜெராட் பிக் ஸ்பெயினின் பார்சிலோனாவில் பிறந்தவர். இவர், ஸ்பெயின் கால்பந்து அணியில் விளைாயாடி வருகிறார். எஃப்சி பார்சிலோனா கிளப் அணிக்காவும் இவர் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்







