இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆளத் தொடங்கியதற்கு முன்புவரை இந்தியா வாரிசு அரசியல் வசம் தான் இருந்தது. மன்னர் ஆட்சி காலூன்றி இந்திய நிலப்பரப்பில் வேர்விட்டு விரிந்து கிடந்த காலத்தில் ராஜாக்கள் மகன்களே அந்த நிலப்பரப்பை ஆளும் அதிகாரமிக்கவர்களாக இருந்தார்கள். இந்திய மனநிலையும் அதனை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளவே செய்தது. சுதந்திரம் பற்றிய பிரக்ஞையோ, சமூகம் பற்றிய புரிதலோ, அரசின் பங்களிப்பு மக்களின் வாழ்க்கையில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியாத மக்கள், அரசனின் காலடியில் தங்களின் சுதந்திரத்தை கொடுத்திருந்தனர். பல சமஸ்தானங்களாக பிரிந்திருந்த இந்தியா தொடங்கிய இந்த வாரிசு அரசியல் பல மாநிலங்களாக இருக்கும் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மாநிலங்களை ஆட்டி வைக்கும் வாரிசு அரசியல்:
இங்கு, வாரிசு அரசியல் என்பது தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடமாக மாறியுள்ளது. சில மாநிலங்களில் வாரிசு அரசியலை வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆயுதமாகவும் மாற்ற முயலப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தெலுங்கு தேசம், தேசிய மாநாட்டு கட்சி, லோக் தல், சிரோமணி அகாலிதளம், சிவசேனா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக ஆகிய கட்சிகள் வாரிசு அரசியலை வெளிப்படையாகவே செய்வதாக கூறினார். ஆனால், வாரிசு அரசியல் என்பது பாஜக உட்பட பல கட்சிகளிலும் நீடிக்கவே செய்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாரிசுகள் ஆட்சியும் அதிகார மையமும்:
மத்திய அமைச்சர் பதவி தொடங்கி மாநில முதலமைச்சர்கள், கவுன்சிலர்கள் வரை வாரிசு அரசியல் இல்லாத இடமே இல்லை. வாரிசு அரசியலானது ஜனநாயகத்தில் புதிய சர்வாதிகாரத்தை தோற்றுவிப்பதாகவும், திறமையின்மையால் நாட்டை சுமைப்படுத்துவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பலரும் வாரிசு அரசியலில் விளைந்தவர்களாகவே உள்ளார்கள்.
பாஜகவுக்கு தற்போது மக்களவையில் 303 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 85 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த 388 பேரில், 45 எம்.பி.க்கள் வாரிசு அரசியல் உறவுகளைக் கொண்டுள்ளனர். அதாவது பாஜகவில் சுமார் 11 சதவீதம் பேர் வாரிசு அரசியலால் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவைக்கு சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கூட வாரிசு அரசியல் கோலோச்சுவதைப் பார்க்க முடிகிறது. பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர், கிரண் ரிஜிஜு மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போன்ற அரசியல் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் பிரதமர் மோடியின் அமைச்சரவையின் முக்கிய முகங்களாக உள்ளனர்.
மோடி அமைச்சரவையில் வாரிசு அரசியல்:
2020 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தை காங்கிரஸ் ஆண்ட போது, முதலமைச்சராக இருந்த கமல் நாத் மீது அதிருப்தி அடைந்து காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து, தற்போது விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவும் வாரிசு அரசியலால் அரசுக்கு வந்தவர் தான். இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகன் அனுராக் தாக்கூர் மத்திய அமைச்சராக உள்ளார். பாஜகவின் முன்னாள் தேசிய பொருளாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த வேத் பிரகாஷ் கோயலின் மகனான பியூஷ் கோயலும் மத்திய அமைச்சராக உள்ளார்.
மத்திய கல்வி அமைச்சரும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சருமான தர்மேந்திர பிரதான், அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய அப்போதைய பாஜக தலைவரான தேபேந்திர பிரதானின் மகன் ஆவார்.
சமீபத்தில் சட்டம் மற்றும் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேசத்தின் முதல் தற்காலிக சபாநாயகராக இருந்த ரிஞ்சின் காருவின் மகன் என்பதை கவனிக்க வேண்டி உள்ளது.
இவர்கள் தவிர, பாஜகவில் சுமார் 11 சதவீதம் பேர் வாரிசு அரசியலால் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவைக்கு சென்றுள்ளனர்.
மாநில சுயாட்சி vs வாரிசு அரசியல்:
மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு குரலை கொடுத்து வருகின்றன. ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்குவதில் தொடங்கி, மாநிலங்கள் மீதான வரி திணிப்பு கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது வரை இந்த மாநில கட்சிகள் (காங்,. இடதுசாரிகள் தவிர்த்து) எழுப்பும் கோரிக்கைகள், அரசியல், பொருளாதார சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த இடத்தில், மத்திய அரசு, தங்களை எதிர்க்கும் மாநிலங்களை தேர்தலில் வீழ்த்துவதற்காக ஒரு புதிய கருவியை கையில் எடுத்துள்ளது, அது தான் வாரிசு அரசியல். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த வாரிசு அரசியல் இந்திய அரசியல் களத்தில் பேசுபொருளாகிவிட்டாலும் கூட இன்றைக்கு அதன் வடிவம் என்பது மாற்று பாதையை நோக்கி பயணிக்கிறது.
ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது வாரிசு அரசியல் என்ற வாதம் வலுவாக பரப்புரையில் வைக்கப்படுகிறது. ஆனால் மக்களோ, அரசியல் தலைவர்களின் வாரிசுகளை தேர்ந்தெடுத்து மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு பொது கருத்தரங்கில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சாமன்யர்களாக இருந்து அரசியலுக்கு வருபவர்களை விட இரண்டு மடங்கு உழைப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் தான் வாரிசுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். உழைக்காவிட்டால் வாரிசு என்றாலே கூட மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
மாநில கட்சிகள் சுயாட்சி உரிமைக்குரலாக நீட் விலக்கு, ஜி.எஸ்.டி. குடியுரிமைத் திருத்த சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 நீக்கம் போன்ற பல விஷயங்களை எதிர்த்ததில் மாநில கட்சிகளின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது. மத்திய அரசு அல்லது பாஜகவுக்கு எதிராக இன்றைக்கு வலுவான எதிர்ப்பு குரலை தெரிவிக்கும் இடத்தில் மாநில கட்சிகளே உள்ளன. 8 ஆண்டுகள் சாதனைகளை முன்வைக்கும் பாஜக அரசுக்கு, காங்கிரசின் தொய்வு சாதகமாக இருந்தாலும் மாநில கட்சிகளின் உரிமைக்குரல் ஓங்கி ஒலிப்பது சவாலாக உள்ளது. இந்நிலையில் தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சி ,தேசிய மாநாட்டு கட்சி, லோக் தல், சிரோமணி அகாலிதளம், சமாஜ்வாதி, சிவசேனா, தெலுங்கு தேசம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வாரிசுகளுக்காக அரசியல் செய்யும் கட்சி என்று தொடர்ந்து பாஜக கூறி வருகிறது. உரிமைக் குரலுக்கு எதிராக வைக்கப்படும் வாரிசு அரசியல் எதிர்ப்பு முழக்கம் எந்தளவிற்கு கைக்கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, ஜனநாயகத்தில் புதிய சர்வாதிகாரத்தை வாரிசு அரசியல் ஏற்படுத்துகிறது. உண்மைதான், ஆனால், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாஜக தலைவர்களின் வாரிசுகள் சட்டமன்ற உறுப்பினர்களாக ,அமைச்சர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் உத்தரபிரதேச அமைச்சராக உள்ளார். இப்படி வாரிசு அரசியல் இன்றைக்கு புரையோடி போகாத கட்சிகளே இல்லை. அதனால், வாரிசு அரசியல் தாக்குதல் என்பது எந்த ஒரு கட்சியையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சூழலில் இன்று இல்லை. அதனால், மக்களிடையே, வாரிசு அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னும் சமூக விஞ்ஞானிகள் போராட வேண்டிய காலம் இருக்கிறது. சுழலும் இந்த பூமியில், அதனுள் உழலும் அரசியலில் வாரிசுகள் சிக்கியுள்ள குடுவை, மக்கள் சக்தியால் மாயமாகலாம். ஆனால் அந்த மாயம் எந்த தேர்தலில் நிகழும் என்பதை காலமே தீர்மானிக்கும்.