காரமடை அருகே கள் குடிக்கச் சென்ற ஆதிவாசி இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே, தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான விவசாயி குப்புசாமி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் சட்ட விரோதமாக தென்னங்கள் இறக்கி
விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள்ளு குடிப்பதற்காக, காளியூர் பகுதியை சேர்ந்த 34 வயதான ஆதிவாசி இளைஞர் ஜெயக்குமார், தனது நண்பர்கள் சிலருடன் இருசக்கர வாகனத்தில், குப்புசாமி தோட்டத்திற்கு செனறுள்ளார். அப்போது இவருடன் கள்ளு குடிக்க வந்த சக நண்பர்கள் அளவான போதையுடன் வீடு திரும்பி உள்ளனர். ஆனால் ஜெயக்குமார் மட்டும் போதை தலைக்கு ஏறியதால் அங்கேயே
படுத்துள்ளார்.
இதனிடையே, இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால், விவசாயி குப்புசாமி தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைந்துள்ளார். இரவு நேரமாகியதால் குப்புசாமி காட்டுயானைகள் விளைநிலத்திற்கு நுழையாமல் இருக்க மின்சாரத்தை செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, போதை தெளிந்த நிலையில், ஜெயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் குப்புசாமி தோட்டத்தின் வழியே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தின் நுழைவு வாயிலில் காட்டுயானைகள் வருவதை தடுக்க வைத்திருந்த மின்வேலியின் மீது நிலை தடுமாறி விழுந்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மீது மின்சாரம் பாய்ந்து மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அந்த வழியாக வந்த நபர்கள், அது குறித்து தகவல் அளித்து உடனடியாக மின்சாரம் துன்டிக்கபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விவசாயி குப்புசாமி மீது வழக்கு பதிவு செய்த காரமடை போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







