சினேகன் என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என நடிகை ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி சினேகம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி தனது சினேகம் நிறுவனப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினார் என ஜெயலட்சுமி மீது புகார் ஒன்றை அளித்தார் திரைப்பட பாடலாசிரியர் சினேகன்.
இந்த நிலையில் சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் மனு ஒன்றை இன்று அளித்துள்ளார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, சினேகன் தன்னை தவறாகச் சித்தரிக்கும் நோக்கில் இதுபோன்ற புகார் அளித்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். சினேகன் விளம்பரம் தேடுவதற்காகவே தன்னை அவமானப்படுத்திப் பேசியுள்ளதாகவும் இது தொடர்பாகத் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தான் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்படி சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி மக்களுக்குப் பல நற்செயல்களைச் செய்து வருவதாகவும் கூறினார். எந்த இடத்திலும் சினேகன் பெயரைப் பயன்படுத்தி நன்கொடை வாங்கவில்லை என்று கூறினார். சினேகன் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்,அவர் வேண்டுமென்றே இது போன்று புகார் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் நண்பர்களிடம் இருந்து நான் பணம் பெற்றுள்ளதாகக் கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் .
சினேகன் எனக்கு அனுப்பிய நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார். அந்த முகவரி என்னவென்று சொல்ல வேண்டும் எனப் பேசிய அவர், “சினேகன் திமுகவுக்கு விலை போய் விட்டார். அவருடைய பெயரை நான் தவறாகப் பயன்படுத்தினேன் என்று கூறி ஆதாரம் இல்லாமல் புகார் கொடுத்துள்ளார். இதுவரை என் மீது எந்த புகாரும் இல்லை” என்றும் கூறினார்.







