தொழிலதிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; ஒருவர் கைது

தொழிலதிபரை கடத்தி கொலை செய்துவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுருட்டி தூக்கிவீசிய சம்பவத்தில் விபச்சார புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் பாதை ஆற்று பாலம் அருகே பாலிதீன் கவரில் இறந்த ஒருவரின்…

தொழிலதிபரை கடத்தி கொலை செய்துவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுருட்டி தூக்கிவீசிய சம்பவத்தில் விபச்சார புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் பாதை ஆற்று பாலம் அருகே பாலிதீன் கவரில் இறந்த ஒருவரின் உடல் கிடப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கை, கால் கட்டப்பட்ட நிலையில் கவரில் ரத்தகாயங்களுடன் இருந்த ஆண் நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விருகம்பாக்கம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்தனர்.

விசாரணையில், ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் கான்கிரீட் மிக்ஸிங் தொழில் செய்து வருவதும்  தெரியவந்தது.  இந்நிலையில் தொழில் போட்டி காரணமாக பாஸ்கரன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட தொழில் அதிபர் பாஸ்கரனுக்கும் விபச்சார புரோக்கர் கணேசனுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில் கொலை நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும், பாஸ்கரன் பெண்களுடன் தனிமையாக இருப்பதற்கு கணேசன் வீட்டிற்கு சென்ற போது பெண்கள் வருவதில் தாமதமானதால் பாஸ்கரன் கோபமடைந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாஸ்கரனை கணேசன் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் நிலைதடுமாறி பாஸ்கரன் கீழே விழுந்த நிலையில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கைது செய்யப்பட்ட கணேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த கணேசன், கவரில் பாஸ்கரனின் உடலை மறைத்து தோளில் சுமந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று உடலை ஆற்றுப்பாலம் அருகே போட்டதாக கணேசன் கூறியுள்ளார். கொலை செய்த கணேசன் விபச்சார தொழில் மட்டுமல்ல சினிமா பைனான்சியராகவும் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. கொலை செய்துவிட்டு செங்குன்றத்தில் தலைமறைவாக இருந்த கணேசனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.