சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காவல் துறை அனுமதி பெற்று சென்னையில் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளில் பெரும்பாலான சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய கடற்கரை ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிலைகளை கரைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், கடலில் கரைக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட 25,000 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுகிறது.
விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுவதால், 27,000 காவலர்கள் நகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைகளில் உயர் கோபுரம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலில் மிதக்கும் சிலைகளை மணற்பரப்புக்கு எடுத்துவர 2 ராட்சத கிரேன்கள் ஒவ்வொரு கடற்கரைகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
4 கடற்கரைகளிலும் தலா ஒரு இணை ஆணையர் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சனைக்குரிய வழித்தடங்களில் ஊர்வலம் செல்லும்போது, பிரச்சனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மாலை புதுச்சேரி கடற்கரையில் கரைக்கப்படவுள்ளது. இதனால், நேருவீதி, காந்திவீதி, எஸ். வி. பட்டேல் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை கொண்டாட ஆயிரக்கணக்கான வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளதால் நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்து ஊர்வலத்தையடுத்து, புதுச்சேரியின் புகழ்பெற்ற சண்டே மார்க்கெட்டின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கான ஊர்வலத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
– இரா.நம்பிராஜன்








