ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் உலாவிய எலி; கேண்டீனை மூட உத்தரவு

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீனை மூட  மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயபுரத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான…

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீனை மூட  மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான இங்கு, சென்னை மக்கள் மட்டுமல்லாது, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் தனியாருக்கு சொந்தமான கேண்டீன் உள்ளது. அங்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட திண்பண்டங்களான பஜ்ஜி, வடைகளின் மீது எலி ஏறிச்செல்லும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து கேண்டீன் உரிமையாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கேண்டீன் சார்பில் அது விற்பனைக்கு அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  எலி உண்ட திண்பண்டங்களை கேண்டீன் பணியாளர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.  திண்பண்டங்களை எலி உண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, முதல்வர் பாலாஜி கேண்டீனை மூட உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.