செய்வினைகளை எடுப்பதாக நம்பவைத்து சாய்பாபா பக்தரிடம் லட்சங்களை சுருட்டிய சைக்காலஜி பட்டதாரி, பெண் தோழியுடன் கைது…. இறை பக்தி இருப்பவர்களை குறிவைத்து நூதன பண மோசடியில் இருவரும் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்… குற்றவாளிகள் சிக்கியது எப்படி…? செய்தி தொகுப்பில் காணலாம்…
சென்னை கே.கே நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஐடி ஊழியர் மோகன்நாத். தீவிர சாய்பாபா பக்தரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சாய்பாபா பஜனை நிகழ்ச்சியில் பாண்டிச்சேரியை சேர்ந்த சபரி நாதன் என்பவர் சந்தித்து பழக்கம் ஏற்பட்டது. சாய்பாபா பற்றிய பல கதைகளை மோகன் நாத்திற்கு சபரி நாதன் கூறியதால் அவரை நம்பி நண்பர்களாக பழகி வந்தார். தனக்கு ஜோசியம் தெரியும் என்றும், தனக்கு செய்வினைகள் எடுக்க தெரியும் என்றும் கூறி நம்ப வைத்தார்.
இந்நிலையில், தனது இரண்டு சகோதரர்கள் தனக்கு சூனியம் வைத்திருப்பதால் நல்ல காரியங்கள் பல தடைப்பட்டு வருவதாகவும், இதனால் பரிகாரம் செய்ய வேண்டும் என மோகன் நாத், சபரி நாதனிடம் கூறியதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி சபரி நாதன் அவரை மூளைச்சலவை செய்து அவசர தேவைக்காக சுமார் 3 முறை தவணை முறையில் 2.5 லட்சம் ரூபாய் பெற்றார்.
இந்த நிலையில் கடந்த மேமாதம் செய்வினையை நீக்க மேலும் சில பரிகார பூஜை செய்ய வேண்டும் எனவும், சீரடிக்கு நேரடியாக சென்று நகையை வைத்து அதை தடவி சூனியத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்து, மோகன்நாத்திடம் இருந்து 15 சவரன் நகைகளை சபரிநாதன் பெற்று கொண்டார். பல நாட்களாகியும் சபரி நாதன் திரும்ப வராததால் சந்தேகமடைந்த மோகன் நாத், சபரி நாதனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன்நாத் மே மாதம் 12ஆம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சபரி நாதனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சபரி நாதனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தும் போது, சூளைமேட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சபரிநாதனின் சீடராக இருந்த ராதா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சபரி நாதன் சைக்காலஜி படித்துள்ளதும், அந்த படிப்பின் மூலம் பக்தி மார்க்கமாக இருக்கும் பலரிடம் இது போன்று செய்வினை இருப்பதாக கூறி பணம், நகைகள் பெறுவதே வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் சபரி நாதன் மீது இது போன்ற மோசடி வழக்குகள் உள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சபரிநாதன் மோசடி வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்த போது, ராதாவை சந்தித்தார். விருதுநகரைச் சேர்ந்த ராதா வேறொரு வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்தார். இருவரும் ஜாமீனில் வெளிவந்து ஒன்றாக சென்னை வந்து, கே.கே.நகரில் தங்கி, தங்களது மோசடியை அரங்கேற்றி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீனில் வெளிவந்த சபரிநாதன் அடுத்தடுத்து அவதாரங்கள் எடுத்து பல்வேறு விதமான முறையில் மோசடிகளை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. “தன்னிடம் பத்து நிமிடம் பேசினால், ஈசியாக நம்ப வைத்து ஏமாற்றி விடுவேன்” என்று கைதான சபரி நாதன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சபரி நாதனிடமிருந்து 60 ஆயிரம் பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோசடி செய்த சில நகைகளை பாண்டிச்சேரியில் சபரி நாதன் விற்று இருப்பது தெரியவந்ததையடுத்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்தனர். மந்திரவாதி போல செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டு கைதான சபரிநாதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கைதான தகவல் தெரிந்த பிறகு பல புகார்கள் வர வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










