போலீசார் அழைத்துச் சென்று விசாரித்ததால் நகை வியாபாரி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரோஜா ராஜசேகர் என்பவர் நகை வியாபாரம் செய்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பொறுப்பிலும் இருந்தார். இந்நிலையில் திருட்டு நகை வாங்கி விற்பனை செய்ததாக எழுந்த சந்தேகத்தின் அடைப்படையில் ரோஜா ராஜாசேகரையும் அவரது மனைவி லட்சுமியையும் போலீசார் விசாரித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் திருச்சி கே.கே நகர் குற்ற பிரிவு போலீசார் ரோஜா ராஜாசேகரையும் அவரது மனைவியையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும் விசாரித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் கணவன், மனைவி இருவரையும் போலீசார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்து வந்ததிலிருந்து மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன் தினம் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனை அடுத்து, திருச்சி மாநகரம் கே.கே நகர் காவல் நிலைய தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று துன்புறுத்தியதால் தான் ரோஜா ராஜசேகர் தற்கொலை செய்துக்கொண்டார் எனக் குற்றம் சாட்டி, பட்டுக்கோட்டை முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் அவரை மன உளைச்சலுக்கு தள்ளிய காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் நகை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருச்சி கே.கே நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமா சங்கரியை
ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யப்ரியா
உத்தரவிட்டிருக்கிறார்.







