ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு பி.எஸ்.எல்.வி. -சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. ராக்கெட் ஏவுதலுக்கு முன்பான இறுதிக்கட்ட சோதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். அதனுடன், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து, இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது 2026ம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட் மூலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
https://x.com/isro/status/2010582403732132185
முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டிருந்தது. மேலும், இதனுடன் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.
இந்த நிலையில், பி.எஸ்.எல்..வி சி 62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் 3வது நிலையின் முடிவில் ஒரு கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.







