பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தனியார் நூற்பாலையின் வாகனத்தை உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி, தனது பேத்தியுடன் மாதேஸ்வரன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த தனியார் நூற்பாலை வாகனம் மோதியதில் மூதாட்டி லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு முன்னதாக கோபமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் தனியார் நூற்பாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் வேகத்தடை மற்றும் சிசிடிவி கேமரா அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









