புதையல் எடுக்க குழி தோண்டியவர் அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து வந்த லட்சுமணன் அவ்வப்போது புதையல் எடுப்பதாக கூறி புதையல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கமாம். இந்த நிலையில் புதையல் எடுக்க போவதாக கூறிவிட்டு சென்ற லட்சுமணன் வீடு திரும்பாததால் அவரது மகன்கள் வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர் .
வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி ஆழத்தில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு அதனை சுற்றி மஞ்சள் குங்குமம் தெளிக்கப்பட்டும், எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது. அதேபோல் கோழியை அறுத்து ரத்த காவு கொடுத்தது போன்று ரத்த துளிகளும் சிதறிக்கிடந்தது.

தோண்டப்பட்ட பள்ளத்தில் தியான நிலையில் அமர்ந்தவாறு லட்சுமணன் உயிரிழந்த நிலையில் இருப்பதாய் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் பள்ளத்திலிருந்து தியான நிலையில் சடலமாக அமர்ந்திருந்ததால் லட்சுமணன் நரபலி கொடுக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வழக்கு பதிவு செய்த தேன்கனிக்கோட்டை போலீசார் , லட்சுமணன் உடலை மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். புதையல் தேட பள்ளம் தோண்டும் பொழுது லட்சுமணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது அவரை யாரேனும் நரபலி கொடுத்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







