ராஜஸ்தானில் ரசாயனத்தை குடித்த 4 பேர் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை!

ராஜஸ்தானில் ரசாயனத்தை மதுவென நினைத்து குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் வேலை செய்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு புறப்பட்டுள்ளனர். அப்போது பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.