குஜராத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பொதுமக்களுடன் இணைந்து அந்த ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
குஜராத் மாநிலத்திற்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்திநகர்-மும்பை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இது நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் விரைவு ரயிலாகும்.
ஏற்கனவே டெல்லி- வாரணாசி மற்றும் டெல்லி – வைஷ்ணோ தேவி கத்ரா இடையே வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் விரைவு ரயில்களில், கூடுதல் சிறப்பம்சமாக இதுவரை பயன்படுத்தப்பட்ட ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஆயிரத்து 128 பயணிகள் அமரும் திறன் கொண்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வந்தே பாரத் ரயில்களில் சாய்வு இருக்கைகள், தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமரா, வைஃபை வசதி, மூன்று மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஜிபிஎஸ் அமைப்புகள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காந்திநகரில் இருந்து அகமதாபாத்துக்கு வந்தே பாரத் விரைவு ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து மகிழ்ந்தார்.
பின்னர், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். இதையடுத்து, குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேலுடன் கலுபூர் நிலையத்திலிருந்து தூர்தர்ஷன் கேந்திரா நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது, ரயிலில் பயணம் செய்த பயணிகளுடன் கலந்துரையாடினார்.
-இரா.நம்பிராஜன்









