அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில் தற்போது இயங்கிவரும் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில், 1992-ம் ஆண்டு, தினசரி 1500 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் திறக்கப்பட்டது. 33 ஆண்டுகள் கழித்தும் இன்றுவரை இப்பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 500 பேருந்துகளே வந்து செல்கின்றன. கும்பகோணம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மகாமகம் குளத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரமும், கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்திலும், நகரின் மையப் பகுதியில் அனைத்து மக்களுக்கும் வசதியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தேவையில்லாமல் இப்பேருந்து நிலையத்தை கும்பகோணம் நகரத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாக்கோட்டை ஊராட்சியில், கருப்பூர் கிராமத்திற்கு மாற்றும் முயற்சியில் இந்த திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு ஈடுபட்டு வருவதாக கும்பகோணம் மாநகர மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அந்த பகுதியில் அமைச்சர், கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒருசில அதிகாரிகள் இவர்களின் பினாமிகள் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான நிலங்கள் அதிக அளவு உள்ளதால், அவைகளின் நில மதிப்பை உயர்த்தக்கூடிய வகையில் சுயநல நோக்குடன் இங்கு புதிய பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு திமுக அரசு தற்போது நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கும்பகோணம் மாநகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக எனது தலைமையிலான அம்மாவின் அரசு, மத்திய அரசோடு வாதாடி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இந்த பகுதிகள் அறிவிக்கப்பட்டன. புஞ்சை நிலங்களும், நஞ்சை நிலங்களும், அவைகளின் விவசாயமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் நமது கொள்கை. ஆனால், திமுக அரசு தங்களது சுயநலத்திற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க அந்த பகுதியிலுள்ள புஞ்சை நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும், வீட்டு வரி 100 சதவீத உயர்வு, வணிக நிறுவனங்களுக்கான சொத்து வரி 150 சதவீத உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பை வரி, தொழில் வரி என்று உள்ளாட்சித் துறையில் வசூலிக்கப்படும் வரிகள் பல மடங்கு உயர்ந்த நிலையில், கும்பகோணம் மாநகராட்சியின் வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், கும்பகோணம் மாநகர மக்களின் அடிப்படை வசதிகளில் எந்த முன்னேற்றமுமில்லை. குண்டும் குழியுமாக சாலைகள், மக்களின் தேவையை பூர்த்தி செய்யாத வகையில் குடிநீர் பற்றாக்குறை, பல இடங்களில் எரியாத தெரு விளக்குகள், தெருநாய்களின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தாத மாநகராட்சி நிர்வாகம் என்று திமுக அரசில், கும்பகோணம் மாநகராட்சியின் அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தற்போதுள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையமே முழுமையான அளவு உபயோகிக்கப்படாத நிலையில், 10 கி.மீ. தள்ளி சாக்கோட்டை ஊராட்சியில், கருப்பூர் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உள்நோக்கத்தோடு, சுயநலத்தோடு இந்த அரசும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒருசில கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகளும் செயல்படுவதைக் கண்டித்தும், இந்த மக்கள் விரோதத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தியும், கும்பகோணம் மாநகராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 20.12.2025 – சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், கும்பகோணம் மாநகராட்சி மையப் பகுதியில் உள்ள காந்தி பூங்கா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான R. காமராஜ், MLA., தலைமையிலும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் R.K. பாரதிமோகன், Ex. MP., கும்பகோணம் மாநகரக் கழகச் செயலாளர் ராம. ராமநாதன், Ex. MLA., கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரதிமீனா P.S. சேகர், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளரும், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளருமான AVK. அசோக்குமார், மாவட்டக் கழக அவைத் தலைவர் க.தவமணி, Ex. MLA., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







