ஆண் நண்பர்களுடன் சேர்ந்து விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… கொலைக்கான காரணம் என்ன..? என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன். இவர் சென்னை நங்கநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மார்ச் 18 ஆம் தேதி பணிக்கு புறப்பட்ட ஜெயந்தன், பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சென்று வருவதாக தனது சகோதரியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெயந்தன் ஊருக்குச் சென்று சில நாட்கள் கடந்தும் அவர் வீடு திரும்பாததால், அவரது சகோதரி ஜெயந்தனை செல்போனில் தொடர்புகொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த ஜெயந்தனின் சகோதரி, தனது சகோதரரை காணவில்லை எனக்கூறி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜெயந்தனின் செல்போன் சிக்னல் எங்கெல்லாம் பயணித்துள்ளது? எங்கு வைத்து அணைத்து வைக்கப்பட்டது? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தியதில், காணாமல் போன ஜெயந்தனின் செல்போன் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தில் இறுதியாக அணைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. ஜெயந்தனின் Call Log போன்ற விவரங்களை ஆய்வு செய்ததில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவர் இறுதியாக பேசியுள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது. அதனடிப்படையில் புதுக்கோட்டை விரைந்த தனிப்படை போலீசார், அந்த பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
முதலில் தனக்கு ஜெயந்தன் யார் என்று தெரியாதென்று மறுத்த அந்த பெண், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையால் அடுக்கடுக்கான பல உண்மைகளை கக்கினார். பாலியல் தொழிலாளியான தனக்கும் ஜெயந்தனுக்கும், தாம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் அறிமுகம் ஏற்பட்டதாக பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பின் இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு தான் ஜெயந்தனை பிரிந்து சென்றதாகவும் சம்மந்தப்பட்ட அந்த பெண், போலீசார் விசாரணையில் தெரிவித்தார். மார்ச் 19 ஆம் தேதி புதுக்கோட்டைக்கு தன்னை பார்க்க வந்த ஜெயந்தன், மீண்டும் தன்னுடன் நெருங்கி பழகுமாறு கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் ஜெயந்தனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரை பகுதியில் புதைத்து விட்டதாகவும் கூறி போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தார். குறிப்பாக மார்ச் 20 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் உடற்பாகங்களை கட்டைப்பை மற்றும் சூட்கேசில் எடுத்துச் சென்று புதைத்ததாக பெண் பகீர் வாக்குமூலம் அளித்தார். கொலை செய்து புதைக்க தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற ஆண் நண்பரும், அவரது நண்பரான கோவளத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரும் உடந்தையாக செயல்பட்டதாகவும் பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
அதனடிப்படையில் அந்த பெண்ணை கைது செய்து சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார், அவரிடம் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவளம் கடற்கரையில் உடற்பாகங்களை புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாக பெண் விசாரணையின் போது கூறியுள்ளதாகவும், அடுத்தகட்டமாக திருப்போரூர் தாசில்தார் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த இடம் புதுக்கோட்டை என்பதாலும், உடற்பாகங்கள் புதைக்கப்பட்ட இடம் கோவளம் என்பதாலும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் புதுக்கோட்டை போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்தனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கொலையில் பெண்ணுக்கு உடந்தையாக செயல்பட்ட இருவர் தலைமறைவாகிவிட்டதால் அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றி வந்த விமான நிறுவன ஊழியர், புதுக்கோட்டையில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு, உடற்பாகங்கள் கோவளம் கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












