நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டாப் பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பாக சமீபத்திய ஏல அறிவிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு தீவிரமான பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக முதலமைச்சர், குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும்.
இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நிலக்கரி சுரங்கம் தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்கத் வட்டாரங்கள் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், ஏலத்தின் 7வது/17வது தவணையில் இருந்து விலக்கிட வேண்டும் என்றும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்து தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.







