கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு அறையை, அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சர் வழிகாட்டுதல்படி பக்தர்களின் வசதிக்காக கோயில்கள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்காக குறை தீர்க்கும் அறையை தொடங்கி உள்ளதாகவும், 044 2833 9999 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தெரிவிக்கப்படும் குறைகளை, அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கோவில்கள் புதுப்பித்தல், தெப்பக் குளங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 100 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார் என்று தெரிவித்த அவர், தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு வரும் சூழலில் கோயில்கள் திறப்பது குறித்த முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.
கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்கு படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







