காவிரி நீரை சிறு, சிறு வாய்கால்கள் மூலம் திசை திருப்பி, கர்நாடக அரசு பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார் தலைமையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னையில் இருந்து தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சட்ட விரோதமாக காவிரி நீரை சிறு, சிறு வாய்கால்கள் மூலம் திசை திருப்பி கர்நாடக அரசு பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மேகதாது அணையை கட்ட, கர்நாடக அரசு முயற்சி செய்து வருவதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அலுவலகம், ஒழுங்காற்று குழுவுக்கான அலுவலகம் மற்றும் அதற்கான உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்தும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.







