“சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது” தெலங்கானாவில் ராகுல்காந்தி பேச்சு!

சாதிவாரி கணக்கெடுப்பு எக்ஸ்ரே போன்றது; நாட்டின் செல்வம் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதையும் இது உணர்த்தும் என தெலங்கானா தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி பேசியுள்ளார்.  தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர்,  மிசோரம்…

சாதிவாரி கணக்கெடுப்பு எக்ஸ்ரே போன்றது; நாட்டின் செல்வம் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதையும் இது உணர்த்தும் என தெலங்கானா தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி பேசியுள்ளார். 

தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர்,  மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது.  இதன்படி நவம்பர் 7-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை அடுத்தடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.  தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் தெலங்கானாவை பொறுத்தவரை மும்முனைப்போட்டி நிலவுகிறது.  காங்கிரஸ்,  பாஜக மற்றும் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் மூன்று கட்சிகள் தரப்பிலும் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது.  இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் சார்பாக தெலங்கானாவில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக 3 நாள் பயணமாக தெலங்கானா சென்றுள்ள ராகுல் காந்தி,  புபல்பள்ளியில் தொண்டர்களிடையே பேசுகையில்,  தெலங்கானாவில் மக்கள் ஆட்சி நடக்கும் என கனவு கண்டீர்கள். ஆனால், தெலங்கானாவில் ஒரே குடும்பத்தின் ஆட்சி நடக்கிறது.  மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் ஒரே குடும்பத்தின் கையில் உள்ளது.  இது தெலங்கானா இளைஞர்கள் மற்றும் பெண்களை மோசமாக பாதிக்கிறது என்றும் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தான்.  கடந்த பத்து ஆண்டுகளாக மக்களுக்கும் கே.சி.ஆருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர ராவ் தோல்வியை சந்திக்கப் போகிறார் என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும், பேரவைத் தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது என்றும் காங்கிரசுக்கு எதிராக பாஜக,  பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து தெலங்கானாவின் மற்றொரு இடத்தில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசியதாவது:

ராஜஸ்தானில் இலவச சிகிச்சை என்று நாங்கள் உறுதியளித்தோம், இன்று அங்கு ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்.  சத்தீஸ்கரில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தோம், இன்று அங்கு நெல்லுக்கு அதிக விலை கிடைக்கிறது.  கர்நாடகாவில் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம். ஒவ்வொரு மாதமும் பெண்கள் மற்றும் விவசாயிகளின் கணக்குகளுக்கு பணம் வருகிறது.  நான் இங்கே தெலங்கானாவில் சொல்கிறேன் – உங்கள் உரிமை எதுவோ, அதை நாங்கள் உத்தரவாதத்துடன் தருகிறோம். கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என எதுவாக இருந்தாலும் சரி. எதைச் சொன்னாலும் செய்வோம்.

நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை சாதிவாரி கணக்கெடுப்பு. நாட்டில் எத்தனை தலித்துகள், ஓபிசி, பழங்குடியினர் மற்றும் பொதுப்பிரிவினர் உள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு பங்கேற்பு உள்ளது என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படுத்தும். இது நாட்டின் எக்ஸ்ரே போன்றது, மேலும் நாட்டின் செல்வம் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதையும் இது உணர்த்தும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.